Loading...
நியாயவிலை கடைகளில் 1890 காலி பணியிடங்களுக்கு மகளிர் சுயஉதவி குழுவினர் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
நியாயவிலை கடைகளில் மகளிர் சுயஉதவிக் குழுவினரை தற்காலிகமாக நியமிக்க தமிழக அரசு உத்தரவு.

நியாயவிலை கடைகளில் 1890 காலி பணியிடங்களுக்கு மகளிர் சுயஉதவி குழுவினர் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

எழுதியவர் Vasuki
Nov 15, 2026
01:26 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 1,890 பணியிடங்களை நிரப்பும் வரை, அப்பணிகளில் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களைத் தற்காலிகமாக நியமிக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நிரந்தரப் பணியாளர்களைத் தேர்வு செய்வதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்த்து, பொதுமக்களுக்குத் தடையின்றி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இதுகுறித்த முக்கியச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

1,890 காலி பணியிடங்கள்

ஆட்சியர் தலைமையில் தேர்வுக்குழு

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தற்போது 1,714 விற்பனையாளர் பணியிடங்களும், 176 கட்டுநர் (Packer) பணியிடங்களும் காலியாக உள்ளன.

இந்த இடைப்பட்ட காலத்தில், நியாயவிலைக் கடை விநியோகம் தொடர்பாகப் பயிற்சி அளிக்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு கடைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவரைத் தலைவராகவும், மண்டல இணைப் பதிவாளர் மற்றும் மகளிர் திட்ட அலுவலர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட சிறப்புத் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஊதியம்

கல்வி தகுதியும் மாதாந்திர ஊதியமும்

இந்தத் தற்காலிகப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள், சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை அமைந்துள்ள ஊராட்சி அல்லது நகர்ப்புற வார்டு எல்லைக்குள் வசிப்பவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தொடர்ந்து செயல்படும் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதியாக விற்பனையாளர் பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், எவ்விதக் குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் இருக்கக் கூடாது.

தற்காலிகமாக நியமிக்கப்படும் உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு ₹400 வீதம், மாதம் ஒன்றுக்கு விற்பனையாளருக்கு அதிகபட்சமாக ₹7,500-ம், கட்டுநருக்கு ₹6,600-க்கு மிகாமலும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தால் வங்கிக் கணக்கில் நேரடியாக ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT