Loading...
பள்ளி, கல்லூரி விடுதி மாணவர்களுக்கு மாதாந்திர உணவு கட்டணம் உயர்வு: அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு
ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

பள்ளி, கல்லூரி விடுதி மாணவர்களுக்கு மாதாந்திர உணவு கட்டணம் உயர்வு: அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு

எழுதியவர் Vasuki
Oct 24, 2026
05:37 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறையின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்குத் தரமான மற்றும் சத்தான உணவு வழங்கும் நோக்கில், அவர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதாகச் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு அறிவித்துள்ளார். 2026-2027-ஆம் ஆண்டிற்கான சமூக நீதித்துறையின் மானியக் கோரிக்கையின் போது சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பள்ளி மாணவர்களுக்கான உணவுக் கட்டணம் மாதம் ரூ.1,400-லிருந்து ரூ.1,800 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,500-லிருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தி இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு

திட்டத்தில் பயன்பெறும் விடுதிகள்

மாணவர்களுக்கான உணவுக் கட்டண உயர்வு மூலம் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 1,169 விடுதிகளும், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் 379 கல்வி நிறுவன விடுதிகளும் பயனடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், தொண்டு நிறுவன மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்.

இந்த நிதி ஆண்டின் அக்டோபர் 2026 முதல் மார்ச் 2027 வரையிலான 6 மாத கால கூடுதல் செலவினத்திற்காக ரூ.29 கோடியே 41 லட்சத்து 29 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புதிய உணவுப் பட்டியல்

பயோமெட்ரிக் கண்காணிப்பு

உணவுக் கட்டண உயர்வுக்கு ஏற்ப மாணவர்களுக்கான ஊட்டச்சத்து உணவுப் பட்டியல் மற்றும் மாதாந்திரத் தனிநபர் நுகர்வுப் பொருட்களின் அளவுகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களைக் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கீழ் இயங்கும் கடைகள் மூலமாக இணையவழியில் நடப்பு சந்தை விலையில் கொள்முதல் செய்து, தொடர்புடைய வங்கிக் கணக்குகளில் நிதி வரவு வைக்கப்படும்.

மேலும், ஒவ்வொரு விடுதிக்கும் நிதி விடுவிக்கப்படும் போது அங்குப் பயிலும் மாணவர்களின் உண்மையான எண்ணிக்கை மற்றும் வருகைப் பதிவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் எனவும், மாணவர்களின் வருகையைப் பயோமெட்ரிக் மற்றும் டிஜிட்டல் முறையில் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் அரசு நிபந்தனை விதித்துள்ளது.

ADVERTISEMENT