தமிழகத்தில் காவல் நிலையங்களுக்கான அன்றாட செலவு நிதி உயர்வு: ரூ.71 கோடி நிதி ஒதுக்கி அரசு அரசாணை வெளியீடு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் அன்றாட சில்லறை செலவினங்களை உயர்த்தி ரூ. 71 கோடியே 1 லட்சத்து 54 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காவல்துறையின் நிர்வாகம் மற்றும் குற்றத் தடுப்புப் பணிகள் கணிசமாக அதிகரித்துள்ள சூழலில், காவல் நிலையங்களுக்கான அன்றாடச் செலவுகளை எதிர்கொள்வதில் சிரமங்கள் நிலவி வந்தன. இதற்காக அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களை சார்ந்திருப்பதைத் தவிர்க்கவும், ஊழலை முழுமையாக ஒழிக்கவும் இந்த நிதி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2026-27ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையின் போது முதலமைச்சரால் அளிக்கப்பட்ட அறிவிப்பின்படி தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வகை
3 வகைகளாக பிரிக்கப்பட்டு நிதி உயர்வு
இது குறித்து வெளியான அரசாணையில், "இந்த நிலையில், மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களும் அந்தந்த காவல் நிலையத்தின் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கேற்ப மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன".
"அதனடிப்படையில், காவல் நிலையங்களின் அன்றாட செலவினங்களுக்காக ஏற்கெனவே மாதந்தோறும் வழங்கப்பட்டுவரும் எதிர்பாராச் செலவு நிதி, முறையே, 3,750 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், 6,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாகவும், 8,250 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது".
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் காவல் நிலையங்களின் அன்றாடச் செயல்பாடுகள் தடங்கலின்றி நடப்பதுடன், பொதுமக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது