மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து இலவச பயணச் சலுகை & AI உபகரணங்களுக்கு ரூ. 30,000 மானியம்: தமிழக அரசு அரசாணை
செய்தி முன்னோட்டம்
மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பயணம் மற்றும் தற்சார்பு வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில், அரசுப் பேருந்துகளில் இலவச பயண சலுகையை மேலும் பல பேருந்துகளுக்கு விரிவுபடுத்தியும், AI சார்ந்த நவீன உதவி உபகரணங்கள் வாங்க நிதியுதவி அளித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுவரை 40% அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் பயணிக்கும் ஒரு உதவியாளர் சாதாரண நகரப் பேருந்துகளில் மட்டுமே கட்டணமின்றிப் பயணிக்க முடிந்தது தற்போது இச்சலுகை மாநகர மற்றும் நகர சாதாரணப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், தாழ்தளப் பேருந்துகள், LSS மற்றும் டீலக்ஸ் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்கலாம். (குளிர்சாதன ஏசி பேருந்துகளுக்கு இச்சலுகை பொருந்தாது).
மானியம்
AI நவீன கருவிகள் வாங்க ரூ. 30,000 வரை மானியம்
இச்சலுகையை பெற தமிழக அரசு வழங்கிய 16 இலக்க UDID அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். இத்திட்டத்திற்காக முதல்கட்டமாக ரூ. 7.90 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட உதவி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பயன்பாட்டுக்கான செயற்கை உறுப்புகளை வாங்க அரசு மானியம் வழங்குகிறது.
உபகரணத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 30,000 என இரண்டில் எது குறைவோ அத்தொகை மானியமாக அளிக்கப்படும்.
அரசு மருத்துவரின் பரிந்துரையை பெற்று உபகரணங்கள் வாங்கிய 60 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.