10 மசோதாக்களை திருப்பியனுப்பிய ஆளுநர்; 18ம் தேதி சட்டமன்றத்தை கூட்ட அரசு முடிவு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்ற தினத்திலிருந்து தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்வதாகக்கூறி தமிழக அரசு சார்பில் ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணையில், அரசு பணிக்கான 14 காலியிடங்களில் 10 காலியிடங்கள் ஆளுநர் ஒப்புதல் தராத காரணத்தினால் நிரப்பப்படாமல் உள்ளது என்றும், 3 துணைவேந்தர்கள் நியமனம், 4 நடவடிக்கை உத்தரவுகள், முன்கூட்டியே 54 கைதிகளுக்கு விடுதலையளிப்பது தொடர்பான கோப்புகள், டி.என்.பி.எஸ்.சி.தலைவர் நியமனம், 12 மசோதாக்கள் உள்ளிட்டவை நிலுவையில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
வரும் 18ம் தேதி கூடுகிறது சிறப்பு சட்டமன்ற கூட்டம்
இந்நிலையில், தற்போது அரசு மூலம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என்றுக்கூறி ஆளுநர் திருப்பியனுப்பியுள்ளார். அவர் திருப்பியனுப்பியுள்ள மசோதாக்களுள் பெரும்பாலானது பல்கலைக்கழங்களை தொடர்புடையது என்றும் கூறப்படுகிறது. இதனால், மீண்டும் சிறப்பு சட்டமன்றத்தினை கூட்டி ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாக்களை மீண்டும் அப்படியே நிறைவேற்றி அனுப்புவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதற்கிடையே, "இரண்டாவது முறையாக ஒரு மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் பட்சத்தில் அதற்கு அவர் ஒப்புதல் அளிப்பதை தவிர வேறுவழியில்லை" என்றும், "இந்நடைமுறை ஆளுநருக்கும் தெரியும் ஆனால் அவர் அதனை ஏற்க மறுக்கிறார்" என்றும் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார். இதன்படி இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டம் வரும் 18ம்.,தேதி கூட்டப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.