கணினிமயமாகிறது கிராம ஊராட்சிகள்: தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளும் நாளை முதல் 100% கணினிமயமாக்கப்பட உள்ளது. இனி, சொத்து வரி, வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி ஆகியவற்றை நேரில் சென்று கட்ட தேவையில்லை, ஆன்லைன் மூலம் கட்டிக்கொள்ளலாம். கிராம ஊராட்சிகள் மக்களிடம் இருந்து ரொக்கமாக பணத்தை பெறக்கூடாது என்று தமிழக அரசு இன்று(மே 21) உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. தமிழக அரசு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டு வந்தாலும், இதுவரை அனைத்து அலுவலகங்களும் கணினிமயமாக்கப்படவில்லை. கணினிமயக்கப்படுவதால் மக்களின் தேவைகள் உடனுக்கு உடன் பூர்த்தி செய்படுவது மட்டுமல்லாமல், அரசு அலுவலகங்களில் பெறப்படும் லஞ்சத்தையும் சுலபமாக ஒழிக்கமுடியும்.
புதிய கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
இந்நிலையில், கிராம ஊராட்சிகளால் பெறப்படும் அனைத்து வரிகளும் இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட இணையதளம் நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. எனவே, இனி கிராம ஊராட்சிகளுக்கு ரொக்கமாக யாராலும் பணம் செலுத்த முடியாது. tnrd.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி மக்கள் வரி பணத்தை செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், கிராம ஊராட்சிகளில் கட்டடம் கட்டுவதற்கான அனுமதியும் நாளை முதல் ஆன்லைன் மூலம் வழங்கப்பட உள்ளது. புதிய கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.