 
                                                                                மாணவர்களுக்கு குட் நியூஸ்? தேர்தலுக்கு முன்பாக இலவச லேப்டாப்களை வழங்க தமிழக அரசு திட்டம் என தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் உள்ள சுமார் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் மாநில அரசின் முக்கியத் திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025-26 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக, தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் எல்காட் நிறுவனம் வெளியிட்ட டெண்டர் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன. எல்காட் நிறுவனத்தின் மதிப்பீட்டுப் பணிகள் முடிந்த நிலையில், டெல், எச்பி, ஏசர் ஆகிய மூன்று உலகத் தரம் வாய்ந்த கணினி தயாரிப்பு நிறுவனங்களுக்கு 10 லட்சம் லேப்டாப்களைத் தயாரிக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் இந்தியத் தரநிலைகளுக்கு இணங்க லேப்டாப்களைத் தயாரித்து மாநில அரசிடம் ஒப்படைக்கும்.
2026
2026 மார்ச் மாதத்திற்குள் வழங்க திட்டம்
அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் மாணவர்களுக்கு லேப்டாப் விநியோகத்தைத் தொடங்குவதே அரசின் முதன்மை நோக்கமாக உள்ளது. இதன்படி, மார்ச் மாதத்திற்குள் விநியோகம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, விநியோகத் தேதிகள் மற்றும் நடைமுறைகளை இறுதி செய்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெண்டர் ஆவணங்களின்படி, இலவசமாக வழங்கப்படும் இந்த லேப்டாப்கள் 14 அல்லது 15.6 அங்குல டிஸ்ப்ளே கொண்டதாக இருக்கும். இதில், 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்எஸ்டி, அத்துடன் குறைந்தபட்சம் இன்டெல் ஐ3 அல்லது ஏஎம்டி ரைசன் 3 புராசஸர் பொருத்தப்பட்டிருக்கும்.