LOADING...
விவசாயிகளே அலெர்ட்; பயிர்க் காப்பீடு செய்ய நாளையே கடைசி நாள்
பயிர்க் காப்பீடு செய்ய நாளையே கடைசி நாள்

விவசாயிகளே அலெர்ட்; பயிர்க் காப்பீடு செய்ய நாளையே கடைசி நாள்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 14, 2025
12:55 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களுக்குப் பயிர்க் காப்பீடு செய்ய சனிக்கிழமை (நவம்பர் 15) கடைசி நாள் என மாநில வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். பருவமழை காலங்களில் புயல், வெள்ளம் போன்றவற்றால் நெற்பயிர்கள் அதிக அளவில் சேதமடையும் சூழல் ஏற்படுகிறது. இந்த ஆண்டிலும், அண்மையில் மோந்தா புயலால் சில கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. மேலும், வரும் நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், விவசாயிகள் எதிர்பாராத நிதி நெருக்கடியைத் தவிர்க்கப் பயிர்க் காப்பீடு செய்வது அவசியம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகள்

விவசாயிகளின் கோரிக்கை

குறிப்பாக, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி மற்றும் திருவாரூர் உள்ளிட்ட முக்கிய நெல் சாகுபடி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் விரைந்து பயிர்க் காப்பீட்டைச் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கிடையே, விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதில் ஆர்வம் காட்டினாலும், நடைமுறையில் உள்ள காப்பீட்டு விதிமுறைகள் பலனளிக்கக் கூடியதாக இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. தற்போது, ஒரு வட்டாரத்தில் ஏற்பட்ட சேதத்தைக் கணக்கில் கொண்டே இழப்பீடு வழங்கப்படுகிறது. இதனால், வட்டார அளவில் குறைந்த சேதம் ஏற்பட்டு, தனிப்பட்ட அளவில் அதிக இழப்பைச் சந்திக்கும் விவசாயிகள் நிதி நெருக்கடிக்கு ஆளாகின்றனர். எனவே, தனிநபர் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பைத் தனித்தனியாகக் கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.