கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் டிஜிட்டல் திறன் பெற "உலகம் உங்கள் கையில்" என்னும் கருப்பொருளின் கீழ் 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தை நாளை (ஜனவரி 5) தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா நாளை மாலை 3:00 மணிக்கு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது. நாளை நடைபெறும் விழாவில் முதற்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படுகின்றன. அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ போன்ற அனைத்துத் துறை சார்ந்த மாணவர்களுக்கும் இந்த லேப்டாப்கள் வழங்கப்படும்.
விவரங்கள்
லேப்டாப்பின் தொழில்நுட்ப விவரங்கள்
டெல், ஏசர், ஹெச்பி போன்ற உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களின் லேப்டாப்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களின் கல்வித் தேவைக்காக உயர் ரக லேப்டாப்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் ப்ராசஸர் இன்டெல் ஐ3 அல்லது ஏஎம்டி ரைசென் 3, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜூடன் வருகிறது. இயங்குதளம் விண்டோஸ் 11 மற்றும் பாஸ் லினக்ஸூடன் வருகிறது. கூடுதலாக எம்எஸ் ஆபீஸ் 365 மென்பொருள் மற்றும் பெர்பிளெக்சிட்டி ப்ரோ ஏஐ மென்பொருளுக்கான 6 மாத இலவச சந்தாவும், தரமான லேப்டாப் பையும் வழங்கப்படும்.
தாக்கம்
சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கம்
இந்தத் திட்டம் வெறும் கல்வி உபகரணம் மட்டுமல்ல, மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பிற்கும் வித்திடும். தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், கோடிங், கிராஃபிக் டிசைன் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் மாணவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ள இது உதவும். "கல்வி மூலம் சமூக மேம்பாடு: தொழில்நுட்பம் மூலம் பொருளாதார முன்னேற்றம்" என்ற இலக்கை அடைய இத்திட்டம் வழிவகுக்கும். இந்த விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.