16 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை; வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
நெடுந்தீவு அருகே இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 16 பேரை விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வியாழக்கிழமை (அக்டோபர் 21) அவர் அனுப்பிய கடிதத்தில், இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதாலும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் கடலோர மக்களுக்கு ஏற்படும் துயரங்களை தெரிவித்துளளார். தொடர்ந்து நிலவி வரும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். மேலும் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் கைதுகள்
இதுபோன்ற சம்பவங்கள் மீனவ சமூகத்திற்கு கடுமையான துயரத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளார். முன்னதாக, பஹ்ரைன் கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி இடிந்தகரையைச் சேர்ந்த 28 மீனவர்கள் தொடர்பாகவும் கடந்த மாதம் முதல்வர் இதேபோல் கடிதம் எழுதியிருந்த நிலையில், அதைப் பின்பற்றி இப்போதும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் செப்டம்பரில், இலங்கையால் கைது செய்யப்பட்ட 37 மீனவர்களை விடுவிக்கக் கோரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், பின்னர் மத்திய அரசின் தலையீட்டால் விடுதலை செய்யப்படுவதும் வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.