Page Loader
திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டது: முதல்வர் ஸ்டாலின் 
காங்கிரஸின் மாபெரும் வெற்றிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டது: முதல்வர் ஸ்டாலின் 

எழுதியவர் Sindhuja SM
May 13, 2023
04:19 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. 224 இடங்களை கொண்ட சட்டப்பேரவை தேர்தலில் ஏறக்குறைய 140 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ், அம்மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சியை வீழ்த்தியுள்ளது. இதற்கு முன், 38 வருடங்களாக பாஜகவால் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஆனால், 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-104 இடங்களிலும், காங்கிரஸ்-80 இடங்களிலும், ஜனதா தளம்(S)-37 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. 113 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்ற கட்சியால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்பதால், காங்கிரஸ் மற்றும் மதஜ கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தன. ஆனால், இந்த ஆட்சி பாஜகவால் கவிழ்க்கப்பட்டது. எனவே, இந்த வருட தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

details

பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டப்பட்டது: முதல்வர் ஸ்டாலின் 

இந்நிலையில், காங்கிரஸின் மாபெரும் வெற்றிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். ட்விட்டர் பதிவில் அவர் கூறி இருப்பதாவது: "கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்!" என்று கூறியுள்ளார்.