பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது?
நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகுவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் வரை பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம், அதன் பின் கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார். அவரிடம் கட்சி தொடர்பாக எந்தவொரு தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என்று நிர்வாகிகளிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி இருந்தார். அதற்கு, தன் மீது அன்பு கொண்டவர்கள் தன்னுடன் பேசி கொண்டு தான் இருப்பார்கள் என்றும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாலும் நாட்டுக்காக உழைக்கப் போவதாகவும் காயத்ரி ரகுராம் இதற்கு பதிலடி கொடுத்திருந்தார்.
"பெண்களுக்கு மரியாதை இல்லை"
இதையடுத்து, பாஜகவில் இருந்து விலகுவதாக இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கிறார். அவரது ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழக பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுத்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. உண்மையாக உழைப்பவர்களுக்கு இங்கு மரியாதை இல்லை. அப்படி உழைப்பவர்களை விரட்டுவதே அண்ணாமலையின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. நான் இந்த அவசர முடிவை எடுத்ததற்கு முக்கிய காரணமே அண்ணாமலை தான். பிரதமர் மோடி மிகவும் சிறப்பு வாய்ந்தவர். அவர் இந்த தேசத்தின் தந்தை. அவரை நான் என் விஸ்வகுருவாக கருதுகிறேன். அமித் ஷா எப்போதும் என்னுடைய சாணக்கிய குருவாக இருப்பார். என்று கூறி இருக்கிறார்.