இருமல் மருந்தில் 'எத்திலீன் கிளைக்கால்' நச்சு! 'ஆல்மண்ட் கிட்' மருந்துக்கு தமிழக அரசு தடை
செய்தி முன்னோட்டம்
பீகார் மாநிலத்தில் தயாரிக்கப்படும் 'Almond Kit' என்ற இருமல் மருந்தில், மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 'எத்திலீன் கிளைக்கால்' (Ethylene Glycol) எனும் நச்சு இரசாயனம் கலந்திருப்பது ஆய்வகச் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அந்த மருந்தின் உற்பத்தி, விற்பனை, விநியோகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றுக்கு தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உடனடியாக தடை விதித்துள்ளது. இந்த நச்சுத்தன்மை கொண்ட மருந்தை உட்கொள்வதால் கடுமையான சிறுநீரக செயலிழப்பு, மூளை மற்றும் நுரையீரலில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும், தீவிரமான நிலைகளில் இது மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அறிவுறுத்தல்
பொதுமக்களுக்கும், மருந்தகங்களுக்கும் அறிவுறுத்தல் வெளியிட்ட அரசு
அறிவுறுத்தலின்படி, AL24002 என்ற தொகுதி எண் (Batch Number) கொண்ட மருந்துகளை பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதிலும் உள்ள மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்த மருந்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மருந்துக் கடைகளில் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ள அதிகாரிகள், இந்த மருந்து கைவசம் இருப்பவர்கள் அதனைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த அதிகாரிகளை அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பான புகார்கள் அல்லது சந்தேகங்களுக்கு 94458 65400 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் சில இருமல் மருந்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், தமிழக அரசின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.