தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: விவசாயிகளுக்கான டாப் 10 முக்கிய அறிவிப்புகள்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும் பல்வேறு நவீனத் தொழில்நுட்பத் திட்டங்கள் மற்றும் மானிய உதவிகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகளின் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையின் டாப் 10 முக்கிய அறிவிப்புகள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் குறித்துக் கீழே விரிவாகப் பார்ப்போம்.
இயற்கை விவசாயம்
கல்வி, ஆராய்ச்சி மற்றும் இயற்கை விவசாய மேம்பாடு
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களின் களப்பயிற்சிக்காக ரூ.3 கோடியில் 6 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டம் சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் ரூ.5 கோடியில் புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி தொடங்கப்படும்.
மேலும் நஞ்சில்லா விவசாய முறைகளை ஊக்குவித்துச் சந்தை வாய்ப்புகளை உருவாக்க நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
இதனுடன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகளும் உருவாக்கப்படும்.
இயந்திர மானியம்
பொறியியல் மையங்கள் மற்றும் நவீன இயந்திர மானியங்கள்
திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம், கும்பகோணம் ஆகிய இடங்களில் ரூ.4.6 கோடியில் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும்.
வேளாண் இயந்திரங்களைப் பராமரிக்கும் 15 மையங்களுக்கு 50 சதவீத மானியம் வழங்க ரூ.1.12 கோடியும், 100 விவசாயிகளுக்குக் கதிரடிக்கும் களங்கள் அமைக்க ரூ.2.8 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
'வான்மகள்' திட்டத்தின்கீழ் 100 பெண்கள் உட்பட 500 பேருக்கு ட்ரோன் பயிற்சி உரிமம் வழங்கப்பட்டு, 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும்.
தொழில்நுட்பம்
விவசாயிகள் நலன் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சித் திட்டங்கள்
சுமார் 24,000 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்படுவதுடன், சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது ரூ.11 லட்சத்தில் வழங்கப்படும்.
உயிர்ம உரப் பயன்பாட்டிற்கு ரூ.4,000 ஊக்கத்தொகையும், ரூ.122.51 கோடியில் மண்வளப் பாதுகாப்பு இயக்கமும் தொடங்கப்படும்.
மேலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த 'உழவர் செயலி' உருவாக்க ரூ.2 கோடியும், காட்டுப்பன்றி சேதத் தடுப்பிற்கு ரூ.7.35 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்கு ரூ.27.21 கோடியும், மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டிற்கு ரூ.36 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.