பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது: அமைச்சர் பொன்முடி
தமிழக பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது என்று அமைச்சர் பொன்முடி இன்று(மே-26) உறுதியளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் செயல்பட்டு வந்த தமிழ் வழி பாடப்பிரிவுகளை தாற்காலிகமாக ரத்து செய்ய இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் நேற்று காலை அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையடுத்து, ரத்து நடவடிக்கையை நேற்று மாலை அண்ணா பல்கலைக்கழகம் வாபஸ் பெற்றது. இந்நிலையில், இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று விளக்கமளித்துள்ளார். "தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது! எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம்." என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் வழி பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டதன் நோக்கம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திமுக ஆட்சியின் போது பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் வழங்கப்பட்டது. அதன்பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் இயங்கும் 16 உறுப்பு கல்லூரிகளுள் 11 கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் தமிழ் வழி பாடப்பிரிவுகள் செயல்பட துவங்கியது. இந்நிலையில், இதனை தற்காலிகமாக ரத்து செய்வதாக அண்ணா பல்கலைக்கழகம் நேற்று அறிவித்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் பொன்முடி, தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது என்று உறுதியளித்துள்ளார்.