நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்
கோடியைகரைக்கு தென்கிழக்கில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகையைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். நாகை மாவட்டம் வேப்பம்பூலம் பகுதியை சேர்ந்த மணியன், வேல்முருகன், சத்யராஜ் மற்றும் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கோடிலிங்கம் உள்ளிட்ட நான்கு பேர் நேற்று மாலை அஞ்சலை அம்மாள் என்பதற்கு சொந்தமான படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு படகில் வந்த மூன்று கடற்கொள்ளையர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களின் படகில் ஏறி அவர்களை தாக்கினர். மீனவர்களை கத்தியால் தாக்கி விட்டு அவர்களிடமிருந்து ₹3 லட்சம் மதிப்பிலான வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட உபகரணங்களை கொள்ளை அடித்து சென்றனர்.
சம்பவம் குறித்து கடலோர காவல் படையினர் விசாரணை
கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த நான்கு பேரும் படகில் கரை திரும்பினர். பின்னர் இவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட நபர்களை தமிழ்நாடு மின் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலங்களில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.