டெல்லி குண்டு வெடிப்பு: சிரியா தொடர்புகள், துருக்கி சந்திப்பு உள்ளிட்ட வெளிநாட்டுத் பின்னணி அம்பலம்
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் 15 பேர் பலியான குண்டு வெடிப்புக்கு பின்னால் உள்ள வெளிநாட்டு தீவிரவாத வலையமைப்பை தேசிய புலனாய்வு முகமை (NIA) கண்டறிந்துள்ளது. இந்த சதித்திட்டத்தின் வெளிநாட்டு தொடர்புகள், தீவிரவாத பயிற்சி மற்றும் தகவல் தொடர்பு வழிகளை NIA பட்டியலிட்டுள்ளது. டைம்ஸ் நவ் வெளியிட்ட செய்தியின்படி, இந்தத் தற்கொலை படை தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் நபி மற்ற சந்தேக நபர்களுடன் சேர்ந்து, 2022-ல் துருக்கியில் ஒரு சிரியா தீவிரவாத செயல்பாட்டாளரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு, பாகிஸ்தானை சேர்ந்த உகாஷா என்ற முக்கிய ஹேண்ட்லரின் உத்தரவின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகவல்கள்
புலனாய்வில் வெளியான முக்கியத் தகவல்கள்
"அதிகப் பயிற்சி பெற்ற செயல்பாட்டாளர்" என்று வர்ணிக்கப்படும் அந்த சிரியா ஹேண்ட்லர், உமர் ஒரு "பெரிய நடவடிக்கையில்" பங்கேற்க வேண்டும் என்று அவரை தூண்டினார் என அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது. இந்த துருக்கி சந்திப்பிற்கு பின்னர் தான், உமர் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார் என்று கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஹேண்ட்லர்கள், என்க்ரிப்ட் செய்யப்பட்ட (Encrypted) சமூக ஊடகங்கள் வழியாக டாக்டர் முஸம்மிலுக்கு 40-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தயாரிப்பு வீடியோக்களை அனுப்பியுள்ளனர். தீவிரவாத அமைப்பின் மற்றொரு வெளிநாட்டு ஹேண்ட்லர் 'கர்னல்' (Colonel) என்ற புனைப்பெயரில் இயங்கி வருவது புலனாய்வு நிறுவனங்களின் கண்காணிப்பில் உள்ளது.
கர்னல்
யார் அந்த 'கர்னல்' என்ற மர்ம நபர்?
இந்த மர்ம நபர் , 2024-ல் நடந்த ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு, மங்களூருவில் ஆட்டோ ரிக்ஷாவில் நடந்த பிரஷர் குக்கர் குண்டு வெடிப்பு மற்றும் 2022-ல் நடந்த கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல தென்னிந்தியத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர் பொறியியல் மாணவர்களைத் தீவிரவாதத்திற்கு ஆட்கொண்டவர் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.