டெல்லி: மீண்டும் ஆபாயக் குறியை தாண்டியது யமுனையின் நீர்மட்டம்
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹட்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், டெல்லியில் உள்ள யமுனையின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவைத் தாண்டியுள்ளது. இன்று அதிகாலை 205.75 மீட்டராக இருந்த யமுனை நதியின் நீர்மட்டம், இன்று பிற்பகல் 3 மணியளவில் 206.26 மீட்டராக உயர்ந்தது. இன்று மாலைக்குள் இது 206.70 மீட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரியானாவில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி அரசு உஷார் நிலையில் உள்ளது. டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அதிஷி நேற்று, இந்த விஷயத்தை அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று கூறினார்.
206.7 மீட்டருக்கு மேல் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்தால்...
யமுனை ஆற்றில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், டெல்லியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹரியானா தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதே நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதற்கான முக்கிய காரணமாகும். இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை அதிகமான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் ஹரியானா தடுப்பணைக்கு அதிக அளவு தண்ணீர் வந்துள்ளது. இதை யமுனை ஆற்றிற்கு திருப்பி விடுவதை தவிர வேறு வழி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. 206.7 மீட்டருக்கு மேல் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்தால் யமுனா கதரின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என்று அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். "பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உடனடியாக வெளியேற்றும் பணியை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.