அமைதிக்கான பிரார்த்தனையுடன் ஜி20 மாநாட்டை முடித்து வைத்தார் பிரதமர் மோடி
பிரேசில் அதிபரிடம் ஜி20 தலைவர் பதவியை ஒப்படைத்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று(செப் 10) ஜி20 மாநாட்டை அமைதிக்கான பிரார்த்தனையுடன் நிறைவு செய்தார். "ஜி20 மாநாட்டின் முடிவை நான் அறிவிக்கிறேன். ஒரே பூமி ஒரே குடும்பம் மற்றும் ஒரே எதிர்காலம் என்ற பாதை மகிழ்ச்சியாக இருக்கும் என நம்புகிறோம். நன்றி" என்று தனது இறுதி உரையில் பிரதமர் கூறினார். நவம்பர் 2023 வரை ஜி20 தலைவர் பதவி இந்தியாவிடம் தான் இருக்கும் என்பதால், உச்சிமாநாட்டின் போது விவாதிக்கப்பட்ட விஷயங்களை மதிப்பாய்வு செய்ய ஒரு ஆன்லைன் அமர்வையும் பிரதமர் மோடி முன்மொழிந்தார். மேலும், அடுத்த வருடம் ஜி20-ஐ வழிநடத்த இருக்கும் பிரேசில் நாட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
'ஸ்வாதி அஸ்து விஷ்வா' என்ற பிரார்த்தனையுடன் ஜி20 மாநாடு நிறைவு
ஜி20 தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட பிரேசில் அதிபர், "ஜி 20 கூட்டத்தை திறம்பட வழிநடத்தியதற்காகவும், இந்த உச்சிமாநாட்டில் சிறப்பாக பணியாற்றியதற்காகவும்" பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். உலகளவில் சமத்துவத்தை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளான இன்று, புது டெல்லியின் ராஜ்காட்டில் ஜி20 தலைவர்கள் மற்றும் தூதுக்குழு தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அவர்கள் மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து ஜி 20 நடைபெறும் இடமான பாரத் மண்டபத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது. அதன் பிறகு, : 'ஒரு எதிர்காலம்' என்ற தலைப்பிலான மூன்றாவது அமர்வை வழிநடத்திய பிரதமர் மோடி, 'ஸ்வாதி அஸ்து விஷ்வா' என்ற பிரார்த்தனையுடன் ஜி20 மாநாட்டை நிறைவு செய்தார்.