டெல்லியில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளும் பொறியியல் படித்துவிட்டு பயங்கரவாத பயிற்சி அளித்து வந்ததாக தகவல்
தேசிய புலனாய்வு அமைப்பின்(NIA) 'மோஸ்ட் வான்டட்' லிஸ்டில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர் உட்பட 3 பயங்கரவாதிகள் இன்று டெல்லியில் வைத்து பிடிபட்டனர். அந்த 3 பயங்கரவாதிகளும் பொறியியல் படித்துவிட்டு நாடு முழுவதும் பயங்கரவாத பயிற்சி அளித்து வந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ஷாபி உஸ்ஸாமா(எ)ஷாநவாஸ், டெல்லியில் உள்ள அவரது மறைவிடத்திலிருந்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார். அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு பயங்கரவாதிகள் ரிஸ்வான் அஷ்ரப் மற்றும் அர்ஷத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொறியியலாளரான ஷாநவாஸ், ஐஎஸ்ஐஎஸ் புனே தொகுதி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் ஆவார். அவர் புனேவில் இருந்து டெல்லிக்கு தப்பிச் சென்று அங்கு ஒரு மறைவிடத்தில் வசித்து வந்தார்.
பயங்கரவாதிகளுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்
இந்நிலையில், "சுரங்கப் பொறியாளரான ஷாநவாஸ், தென்கிழக்கு டெல்லியில் ஒரு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்," என்று டெல்லி காவல்துறையினர் செய்தியாளர் கூட்டத்தில் பேசும் போது தெரிவித்துள்ளனர். மேலும், ரிஸ்வான் அஷ்ரப் லக்னோவிலும், அர்ஷத் முராதாபாத்திலும் கைது செய்யப்பட்டனர். "முக்கிய குற்றவாளியான ஷாநவாஸ், அவரது மற்ற இரண்டு கூட்டாளிகளுடன் இன்று காலை கைது செய்யப்பட்டார். மற்றொரு குற்றவாளி, முகமது ரிஸ்வான், தலைமறைவாக உள்ளார்," என்று டெல்லியின் சிறப்பு காவல் ஆணையர் ஹெச்ஜிஎஸ் தலிவால் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் மறைவிடங்களை சோதனையிட்டபோது, கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்கும் பல்வேறு கருவிகள் மீட்கப்பட்டன.