நிலுவை வழக்குகளைக் குறைக்க முன்னுரிமை; புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
இந்தியத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ள நீதிபதி சூர்ய காந்த், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைச் சமாளிக்கவும், நாடு முழுவதும் வழக்குகளைத் தீர்க்க மத்தியஸ்த முறையை ஊக்குவிக்கவும் ஒரு தெளிவான செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பதே தனது முதன்மை நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதியாகப் பதவியேற்பதற்கு முன்னதாக, நீதிபதி சூர்ய காந்த் பத்திரிக்கையாளர்களுடனான உரையாடலில், உச்ச நீதிமன்றத்தில் 90,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். நிலுவை வழக்குகள் குவிவதற்கான காரணங்கள் தெளிவாக இல்லாவிட்டாலும், அவற்றைச் சமாளிக்க வேண்டிய அவசரத் தேவையை அவர் வலியுறுத்தினார்.
கீழ் நீதிமன்றம்
கீழ் நீதிமன்ற வழக்குகளுக்கு தீர்வு காண தனி அமர்வுகள்
உச்ச நீதிமன்றத்தில் தொடர்புடைய வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கீழ் நீதிமன்றங்களில் முடங்கிக் கிடக்கும் வழக்குகளுக்குப் பொறுப்பேற்பேன் என்றும், அவற்றை விசாரித்து முடிவுகட்டத் தனி அமர்வுகளை அமைப்பேன் என்றும் அவர் உறுதியளித்தார். குறிப்பாக, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மிக பழைய வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். நீதிமன்றத்தின் பணிச்சுமையைக் குறைப்பதற்கான ஒரு முக்கியத் தீர்வாக மத்தியஸ்த முறையை (Mediation) நீதிபதி சூர்ய காந்த் சுட்டிக்காட்டினார். மத்தியஸ்தம் ஒரு எளிய தீர்வு என்று அவர் கூறினார். நீதிமன்றங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் இந்த முறையை பரவலாக ஏற்றுக்கொள்வதற்கு ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.