LOADING...
சுப்ரியா சாகு: தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருது!
சுப்ரியா சாகு, ஐக்கிய நாடுகள் சபையின்Champions of the Earth 2025 விருதை வென்றுள்ளார்

சுப்ரியா சாகு: தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருது!

எழுதியவர் Venkatalakshmi V
Dec 11, 2025
11:24 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டின் கூடுதல் தலைமை செயலாளரும் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை) ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுப்ரியா சாகு, ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உயரிய சுற்றுச்சூழல் விருதான 'பூமியின் சாதனையாளர்கள் 2025' (Champions of the Earth 2025) விருதை வென்றுள்ளார். நைரோபியில் நடைபெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் (UN Environment Programme) சார்பில் புதன்கிழமை அன்று இந்த விருது வழங்கப்பட்டது. அவர் 'உத்வேகம் மற்றும் செயல்' (Inspiration and Action) என்ற பிரிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். பிளாஸ்டிக் மாசு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு உட்பட இந்தியாவில் உள்ள முக்கியமான சுற்றுச்சூழல் சவால்கள் குறித்து நீண்ட காலமாக சுப்ரியா சாகு ஆற்றிவரும் முன்னோடி தலைமை பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது

சுப்ரியா சாஹு ஆற்றிய முக்கியப் பணிகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு: 2000-ம் ஆண்டிலேயே நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, பிளாஸ்டிக் மாசு குறித்து பெரிதாகப் பேசப்படாத காலத்திலேயே, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை (Single-use Plastic) ஒழிப்பதற்காக "ஆபரேஷன் ப்ளூ மவுண்டன்" என்ற பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். பசுமை காலநிலை நிறுவனம்: அண்மைக் காலங்களில், கடலோரப் பகுதி மீள் திறனை (Coastal Resilience) மையமாக கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பான 'தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம்' அமைப்பை அறிமுகப்படுத்தினார். மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு: மாநிலத்தில் 10 கோடிக்கும் அதிகமான மரங்களை நடுவதற்குத் தலைமை தாங்கினார். 65 புதிய காப்புக் காடுகளை நிறுவினார். மாநிலத்தின் அலையாத்திக் காடுகளின் (Mangrove Cover) பரப்பளவை இரட்டிப்பாக்கியதுடன், சதுப்பு நிலங்களின் எண்ணிக்கையையும் 1-ல் இருந்து 20 ஆக உயர்த்தினார்.

பணிகள்

சுப்ரியா மேற்கொண்ட சுற்றுசூழல் நல பணிகள்

$60 மில்லியன் மதிப்பிலான 'அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்பு நிதியத்தையும்' (Endangered Species Conservation Fund) தொடங்கினார். நிலையான குளிர்ச்சித் திட்டங்கள்: நகர்ப்புற வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும், குளிர்வுக்கான தேவையை சமாளிக்கவும், 'குளிரும் கூரைத் திட்டம்'(Cool Roof Project) போன்றவற்றை அவர் செயல்படுத்தினார். சுப்ரியா சாகு, கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தின் சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றி வருகிறார். 30 ஆண்டுகள் பொதுப்பணியில் இருக்கும் இவர், இயற்கையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். குறிப்பாக, யானைகள் குறித்து அடிக்கடி அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். ஐ.நா.வின் கூற்றுப்படி, இவரது முயற்சிகள் மூலம் லட்சக்கணக்கான பசுமை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதுடன், தமிழ்நாடு அறிவியல் பூர்வமான, சமூகத்தால் இயக்கப்படும் காலநிலை மீள் திறனுக்கான ஒரு முன்மாதிரியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement