வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு, தருமபுரி-அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கிடையே அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம். கடந்த 1992ம்.,ஆண்டு கிட்டத்தட்ட 655 பேர் இக்கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். இவர்களுள் 400க்கும் மேற்பட்டோர் மலைவாழ் மக்கள். அதன்படி, இக்கிராமத்தில் சந்தன மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், 155 வனத்துறையினர், 6 வருவாய் துறையினர், 108 காவல்துறையினர் என மொத்தம் 269 பேர் 1992ம் ஆண்டு ஜூன்.20ம்.,தேதி சோதனையிட்டனர். அப்போது சில வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டதோடு, 90 பெண்கள் உள்பட 133 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, இச்சோதனையின் போது, 18 மலைவாழ் இனத்தை சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், கிராமமக்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியதாகவும் அரூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் புகாரளித்தனர்.
வனத்துறை அதிகாரிகள் சரணடைய உத்தரவு
இது குறித்து சிபிஐ நடத்திய விசாரணையில் 269 அதிகாரிகளும் குற்றம் செய்தது உறுதியான நிலையில் கைது செய்யப்பட்டனர். தருமபுரி முதன்மை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு 2008ல் மாற்றப்பட்ட நிலையில், விசாரணையினை மேற்கொண்ட நீதிபதி குமரகுரு கடந்த 2011ம் ஆண்டு செப்.,29ம் தேதி தீர்ப்பினை வழங்கினார். குற்றம்சாட்டப்பட்ட 269 பேரில் அப்போது உயிருடன் இருந்த 215 குற்றவாளிகளுக்கு இத்தீர்ப்பு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐ.எப்.எஸ்.அதிகாரியான பாலாஜி மற்றும் எல்.நாதன், இவ்வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையினை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவினை உச்ச நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது. மேலும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட வனத்துறை அதிகாரிகளும் அடுத்த 6 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.