
"சந்தேகம் இருந்தாலே அரசு நிறுவனங்களில் சோதனை செய்வீர்களா?": TASMAC வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) மேற்கொண்ட சோதனை மற்றும் ஆவணங்கள் பறிமுதலுக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறைக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, "உங்களுக்கு சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்தில் கூட உள்ளே நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா?" என்று கேள்வி எழுப்பியது.
பின்னணி
வழக்கு பின்னணி
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை கடந்த மே 16 ஆம் தேதி சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வு, ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடையும் விதித்தது. இந்தத் தடையை ரத்து செய்யக் கோரி, அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வாதம்
தமிழக அரசு வாதம்: 'கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது'
இன்று (அக்டோபர் 14) விசாரணைக்கு வந்த வழக்கில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது எனக் குற்றம் சாட்டினார். அவர் மேலும், "தனிப்பட்ட நபர்களின் மொபைல் போன்களை வாங்கி, அதில் உள்ள தரவுகள் அனைத்தையும் அமலாக்கத்துறையின் நவீன உபகரணங்களில் மாற்றிக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் அமலாக்கத்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?" எனக் கேள்வி எழுப்பினார். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை மற்றும் கணினிகளைப் பறிமுதல் செய்தது "அதிர்ச்சி அளிக்கிறது" என்றும் அவர் வாதிட்டார்.
அமலாக்கத்துறை வாதம்
மோசடி வேலைகள் TASMAC-இல் தினசரி நடைகிறது என அமலாக்கத்துறை வாதம்
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு இதற்குப் பதிலளிக்கையில், டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பி விலையை விட அதிக கட்டணம் வசூலிப்பது, அனுமதிக்கப்படாத வெளிநாட்டு மதுபானங்களை விற்பது போன்ற மோசடிகள் நடைபெறுவதாகவும், இவை அனைத்திலும் லஞ்சப் பணம் மேல் மட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்குத் தொடர்ந்து பகிரப்படுவதாகவும் வாதிட்டார். "இது தினம் தோறும் நடக்கும் நடைமுறையாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுபான கடைகளில் மோசடி நடைபெறுகிறது, அவர்களை மாநில அரசு காப்பாற்றுகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.
கேள்வி
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கேள்வி
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியது: "உங்களுக்கு சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்தில் கூட உள்ளே நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா? டாஸ்மாக் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் சம்பந்தமாக தமிழக அரசு தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் திடீரென அமலாக்கத்துறை ஏன் இந்த விஷயத்தில் தலையிடுகிறது?" என கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அடுத்தகட்ட உத்தரவு, மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களுக்கு இடையேயான அதிகார வரம்பு குறித்த விவாதங்களில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.