பள்ளிகளில் இலவச நாப்கின் வழங்க SC தீர்ப்பு; தமிழகத்தில் இது எப்படி செயல்படுகிறது?
செய்தி முன்னோட்டம்
உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், மாதவிடாய் சுகாதார உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள 'அடிப்படை உரிமை' என அறிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களும் மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள சூழலில், தமிழகம் இத்திட்டத்தில் ஏற்கனவே ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு
தமிழக அரசின் விலையில்லா நாப்கின் திட்டம்
தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஏழைப் பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்த, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2011-ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவிகள், அங்கன்வாடி மையங்களில் உள்ள வளர் இளம் பெண்கள், பிரசவத்திற்கு பிந்தைய தாய்மார்கள் மற்றும் சிறை கைதிகள் ஆகியோருக்கு இத்திட்டத்தின் கீழ் நாப்கின்கள் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டது. பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலமாகவும், கிராமப்புறங்களில் அங்கன்வாடிப் பணியாளர்கள் மூலமாகவும் ஒரு பயனாளிக்கு மாதம் ஒன்றுக்கு 6 நாப்கின்கள் வீதம் ஆண்டுக்கு 18 பாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. பல பள்ளிகளில் நாப்கின்களைச் சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த 'நாப்கின் எரியூட்டிகள்' (Incinerators) பொருத்தப்பட்டுள்ளன.
SC
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்படும் மாற்றங்கள்
தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம், தமிழகத்தில் ஏற்கனவே உள்ள இத்திட்டம் மேலும் வலுப்பெறும்: 1. தனியார் பள்ளிகளுக்கும் கட்டாயம்: அரசு பள்ளிகளில் மட்டுமே இருந்த இந்த வசதி, இனி அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்படும். இல்லையெனில் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். 2. தானியங்கி இயந்திரங்கள்: கைமுறையாக வழங்குவதற்கு பதில், கழிவறைகளிலேயே Vending Machines மூலம் இலவசமாக பெறும் வசதி கட்டாயமாக்கப்படும். 3. மக்கக் கூடிய நாப்கின்கள்: சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க, இனி Bio-degradable நாப்கின்களை மட்டுமே வழங்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தப்படும். தமிழக அரசின் இந்த நீண்டகால திட்டம், தற்போது உச்ச நீதிமன்றத்தால் நாடு முழுவதற்குமான ஒரு சட்டரீதியான உரிமையாக மாற்றப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.