LOADING...
அகமதாபாத் விமான விபத்து: விமானி மீது பழி சுமத்த முடியாது என உச்ச நீதிமன்றம் நெகிழ்ச்சி
ஏர் இந்தியா விமானி மீது பழி சுமத்த முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து

அகமதாபாத் விமான விபத்து: விமானி மீது பழி சுமத்த முடியாது என உச்ச நீதிமன்றம் நெகிழ்ச்சி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 07, 2025
03:22 pm

செய்தி முன்னோட்டம்

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து நீதி விசாரணை கோரி, விபத்தில் உயிரிழந்த விமானியின் தந்தை தாக்கல் செய்த மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) நோட்டீஸ் அனுப்பியது. விபத்தில் பலியான விமானி சுமீத் சபர்வாலின் 91 வயதான தந்தை புஷ்கராஜ் சபர்வாலின் மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்னி ஆகியோர் அடங்கிய அமர்வு, "இது மிகவும் துரதிர்ஷ்டவசமான விபத்து. உங்கள் மகன் பழிக்கப்படுகிறான் என்ற சுமையை நீங்கள் சுமக்கக் கூடாது. இந்தத் துயரத்திற்கு யாரும், குறிப்பாக விமானி பொறுப்பாக முடியாது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த முடியும்." என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

விபத்து

விபத்துக்குக் காரணம்

விமானிகளின் இந்தியக் கூட்டமைப்பும் இதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஜூன் 12 அன்று நடந்த இந்த விபத்தில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், விமான விபத்து விசாரணைப் பணியகம் தனது முதற்கட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இரு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்று குறிப்பிட்டிருந்தது. இதற்குப் பதிலளித்த உச்ச நீதிமன்றம், "நாம் 142 கோடி மக்கள் கொண்ட நாடு. அவர்களில் யாரும் பழியை விமானி மீது சுமத்த வேண்டும் என்று நம்பவில்லை. துயரத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அது விமானிகளால் ஏற்பட்டதல்ல" என்று கூறியது. சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணை கோரும் மனுவை, அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் உறுதியளித்தது.