பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றார் ஜம்மு காஷ்மீர் முதல்வர்! 17 ஆண்டுக்கால திருமண பந்தத்திற்கு முற்றுப்புள்ளி
செய்தி முன்னோட்டம்
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் அவரது பிரிந்து வாழும் மனைவி பாயல் அப்துல்லா ஆகிய இருவருக்கும் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்து வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு தரப்பினரும் தங்களுக்கு இடையே உள்ள அனைத்து சட்டப் பூர்வ வழக்குகளையும் திரும்பப் பெற்றுக்கொண்டு, பரஸ்பரம் பிரிந்து செல்ல ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
கபில் சிபல்
இருவரும் சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்
நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. உமர் அப்துல்லா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "இரு தரப்பினரும் சுமுகமாக பேசி பிரச்சனையை தீர்த்துக் கொண்டுள்ளனர்.
இருவரும் தங்களது சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 142ன் கீழ் பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுவின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறினர்.
திருமண வாழ்க்கை
17 ஆண்டுக்கால திருமண வாழ்க்கையும் பிரிவும்
டெல்லியில் உள்ள ஓபராய் ஹோட்டலில் பணியாற்றிய போது சந்தித்த உமர் அப்துல்லா மற்றும் பாயல் இருவருக்கும் கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஜாஹிர் மற்றும் ஜமீர் என இரு மகன்கள் உள்ளனர்.
17 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தனித்தனியாக வாழத் தொடங்கினர்.
பின்னர் 2011 ஆம் ஆண்டில் தங்களது பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
நீண்ட வழக்கு
குடும்ப நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை நீண்ட வழக்கு
முன்னதாக, கொடுமைப்படுத்தியதாகக் கூறி உமர் அப்துல்லா தாக்கல் செய்த விவாகரத்து மனுவை 2016ல் டெல்லி குடும்ப நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், டிசம்பர் 2023இல் டெல்லி உயர் நீதிமன்றமும் விவாகரத்து வழங்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தது.
மேலும் பாயலுக்கு மாதம் ₹1.5 லட்சமும், மகனின் கல்வி செலவுக்கு ₹60,000 ஜீவனாம்சமாக வழங்கவும் உத்தரவிட்டது.
முடிவு
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142ன் கீழ் முடிவு
டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உமர் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
கடந்த விசாரணைகளின் போது, 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனித்து வாழும் இவர்களது பந்தம் முற்றிலும் முறிந்த ஒரு திருமணம் என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
தற்போது மத்தியஸ்தம் மூலம் இரு தரப்பும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற ஒப்புக்கொண்டதால், சிறப்பு அதிகாரமான பிரிவு 142ஐப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து விவாகரத்து வழங்கி உள்ளது.