முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்
கோவை மாநகர டி.ஐ.ஜி.யாக இருந்தவர் விஜயகுமார். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை மாவட்டத்தில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று(ஜூலை.,7)காலை, துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் கோவையினை மட்டுமின்றி, போலீஸ் வட்டாரத்திலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அவரது உடல் தேனி நகராட்சிக்குட்பட்ட மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இவ்வழக்கு குறித்து கோவை மாநகர காவல்துறை தீவிர விசாரணையினை மேற்கொள்ள துவங்கினர். அவ்வாறு நடத்தப்பட்ட விசாரணையில், டிஐஜி.விஜயகுமார் மனஅழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையறிந்த மேற்குமண்டல ஐ.ஜி.சுதாகர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் விஜயகுமார் மற்றும் அவரது மனைவியினை,ஐஜி அலுவலகத்திற்கு அழைத்து நேரில் கிட்டத்தட்ட 2 மணிநேரம் பேசியுள்ளார். விஜயகுமாரின் மன அழுத்தத்தினைப்போக்க அவர் கவுன்சிலிங் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
துப்பாக்கி இருப்பிடத்தினை முன்னதாக கேட்டு தெரிந்துக்கொண்ட டிஐஜி
மேலும்,கோவை எஸ்.பி.பத்ரிநாராயணனும் விஜய்குமாருடன் பேசி கவுன்சிலிங் கொடுத்ததாக தெரிகிறது. டிஐஜி.விஜயகுமார் கடந்த 10ஆண்டுகளாக ஓசிடி என்னும் மனஅழுத்த பாதிப்பினால் பாதிக்கப்பட்டு ஒரே மருத்துவரை அணுகாமல், வெவ்வேறு மருத்துவத்தினை முயற்சி செய்துவந்துள்ளார். இதுத்தொடர்பாக இணையத்தில் நிறைய குறிப்புகளை தேடிப்பார்த்து மருந்துகளை எடுத்துள்ளார். தனக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வருவதாக 2நாட்களுக்கு முன்னர் தனது நண்பரிடமும் கூறியுள்ளார். அப்போது பேசுகையில் இருவரும் ஆனைக்கட்டிக்கு செல்லத்திட்டமிட்டுள்ளனர். ஆனால், அவரது நண்பர் வராததால் அங்கு சொல்லவில்லையாம். அதுமட்டுமல்லாமல், தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தயநாள் இரவு தனது தனிப்பாதுகாவலரிடம் துப்பாக்கியினை எங்கு வைப்பீர்கள், பத்திரமாக உள்ளதா?என்பதைக்கேட்டறிந்து, அதன் இருப்பிடத்தை தெரிந்துகொண்டுள்ளார். பின்னர் மறுநாள் காலை அந்த துப்பாக்கியினையெடுத்து தலையில் தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.