அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள சர்க்கரை ஆலையினை திறந்து கரும்பு அரவையை துவங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்டவற்றை கரும்பு விவசாயிகள் ஏற்கனவே செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று(ஜூன்.,26) காலை குறிப்பிட்ட அந்த சர்க்கரை ஆலை முன்னிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயணம் மேற்கொண்டு மனுவினை அளிக்க அவர்கள் முடிவு செய்து புறப்பட்டுள்ளனர். இந்த நடைப்பயணத்திற்கான அனுமதியினை காவல்துறை மறுத்துள்ளது. இதனையடுத்து விவசாயிகள் மாநில சங்க தலைவர் வழக்கறிஞர் பழனிசாமி தலைமையில் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து, மீண்டும் நடைபயணம் மேற்கொள்ள விவசாயிகள் முயற்சி செய்துள்ளார்கள்.
போலீஸ் சூப்பரண்ட் பாலசுந்தரம் விவசாயிகளோடு பேச்சுவார்த்தை
அப்போது காவல்துறை அவர்களை மீண்டும் தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. பின்னர் விவசாயிகள் தங்கள் நடைப்பயணத்தினை துவங்கி ஆட்சியர் அலுவலகம் வரை சென்றுள்ளனர். இடையே, அச்சம்பட்டி சாலை அருகே காவல்துறை இவர்களை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸ் சூப்பரண்ட் பாலசுந்தரம் சம்பவயிடத்திற்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் பின்னரே அவர்கள் வேனில் ஏறி ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.