கோடி கணக்கில் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை டெல்லியில் இருந்து திருடிய பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள்
2021ல் மேற்கு டெல்லி தொழிலதிபர் ஒருவரின் வாலட்டில் இருந்து சுமார் ரூ.4 கோடி கிரிப்டோ கரன்சி திருடு போன வழக்கை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வந்தது. அப்போது தான், டெல்லியில் இருந்து திருடப்பட்ட கிரிப்டோ கரன்சிகள் பாலஸ்தீன-காசா போராளிக் குழுவான ஹமாஸின் வாலெட்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டன. டெல்லியில் இருந்து திருடப்பட்ட பிட்காயின் மற்றும் எத்தீரியம் ஆகிய கிரிப்டோ கரன்சிகள் பல்வேறு வாலெட்களில் கண்டுபிடிக்கப்பட்டது முதலில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு, அந்த வாலெட்கள் அனைத்தும் ஹமாஸின் சைபர் பயங்கரவாதப் பிரிவால் இயக்கப்படும் கணக்குகள் என்பதை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கண்டுபிடித்தது. முதலில் டெல்லி போலீஸாரால் அந்த ஐடிகளை 'டீப் டிரேஸ்' செய்து அதை யார் திருடியது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஹமாஸை கடுமையாக கண்காணித்து வரும் உளவுத்துறை ஏஜென்சிகள்
அப்போது தான், இஸ்ரேலின் உளவுத்துறை ஏஜென்சியான மொசாட், வழக்கமான உளவுத்துறை பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, பயங்கரவாத குழுக்களால் இயக்கப்படும் சில சந்தேகத்திற்கிடமான வாலெட்டுகள் பற்றிய தகவல்களை இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்தது. அதன் பிறகே, இந்த திருட்டுக்கு காரணமாக இருந்தது ஹமாஸ் அமைப்பு தான் என்பதை கண்டுபிடிக்க முடிந்தது. இந்நிலையில், தற்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவுக்கும் இடையே பெரும் போர் நடந்து வருவதால், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளுக்கு எதிராக 'ஹேக்கிங்' மூலம் பணம் திருடும் வேலையை ஹமாஸ் மேற்கொண்டு வருகிறதா என்பதை உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் 5வது நாளாக தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இதுவரை 3,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.