ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த ஸ்டர்லைட் ஆலை துவங்கிய நாளிலிருந்தே தொடர்ந்து 22 ஆண்டுகளாக சுற்றுசூழல் பாதிப்பினை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்த ஆலை செயல்பாடு காரணமாக சுற்றுவட்டார கிராமங்களின் நிலத்தடி நீர் முற்றிலும் பாழானது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதனைத்தொடர்ந்தே இந்த ஆலையினை மூட உத்தரவிடக்கோரி பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் உச்சகட்டமாக கடந்த 2018ம் ஆண்டு மே 22ம்தேதி பொதுமக்கள் முன்னின்று பிரம்மாண்ட போராட்டத்தினை நடத்தினர். இதில் காவல்துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மே 28ம் தேதி இந்த ஆலையினை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய கோரிக்கை
இது தொடர்பான விசாரணைகளை உச்ச நீதிமன்றம் தற்போது நடத்திவரும் நிலையில், தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் இன்று(ஆகஸ்ட்.,21) மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா நிறுவனம் நடத்தி வந்த ஸ்டர்லைட் ஆலையால் கடும் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனம் அடிப்படையான விதிகளை கூட பின்பற்றவில்லை. இது சுற்றுசூழல் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால் ஸ்டர்லைட் ஆலையினை தமிழ்நாட்டில் செயல்பட அனுமதிக்கவே முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்துள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு அபராதம் விதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.