சென்னையில் இணையதளத்தை பயன்படுத்தி ஸ்டாம்ப் போதை பொருள் விற்பனை - 4 பேர் கைது
சென்னையில் வாடகை வீடு எடுத்து சூரிய ஒளி படமால் சொட்டுநீர் பாசனம் செய்து எல்ஈடி விளக்குகள், ஏசி, மின்விசிறி உள்ளிட்ட அனைத்து வசதிகளை செய்து கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்த பொறியாளர், ரயில்வே ஊழியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். மேலும் இது குறித்த விசாரணையில் கேளிக்கை விடுதிகளில் வெளிநாடுகளில் இருந்து கிரிப்டோகரன்சி மூலமாக டார்க் வெப்சைட்டுகளில் போதை ஸ்டாம்புகளை வாங்கி விற்பனை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதனை கண்டறிய பட்டாளம் பகுதியை சேர்ந்த நரேந்திர குமார் என்பவரிடம் எல்எஸ்டி ஸ்டாம்ப் போதை பொருளை வாங்குபவர் போல தனிப்படை போலீசார் ஒருவர் நடித்துள்ளார். ஒரு ஸ்டாம்பின் விலை 1,200 என பத்து ஸ்டாம்புகள் 1,20,000க்கு விலைபேசப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் கஞ்சா செடி வளர்க்க பயிற்சி
பின்னர் பணத்தை வாங்கி கொண்டு ஸ்டாம்ப்க்களை கொடுக்கும் போது, மறைந்திருந்த போலீசார் இரண்டு பேரினை கைது செய்துள்ளனர். அவர்களுள் ஒருவரான ஷ்யாம் என்பவரை விசாரித்ததில் மாடம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் சக்திவேல் தான் இவர்களுக்கு போதை பொருள்களை விநியோகம் செய்வது தெரியவந்துள்ளது. முக்கிய நபரான சக்திவேலையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சக்திவேல் ஒரு பொறியாளர் என்பதும், இணையத்தளம் குறித்த நல்ல அறிவினை கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. யூடியூப் மூலம் கஞ்சா செடி வளர்ப்பது குறித்தும், ஸ்டாம்ப் போதை பொருள் குறித்த விவரங்களையும் தெரிந்து கொண்ட இவர் ரயில்வே ஊழியரான ஷ்யாம், நரேந்திர குமார் மற்றும் ஸ்ரீ காந்த் ஆகியோர் மூலம் இவற்றை விற்பனை செய்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.