ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி: தவறு செய்த யாரையும் விடமாட்டோம் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் நிலமோசடி விவகாரத்தில் காவல்துறை விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கோவில் நிலங்களை அபகரித்த யாரையும் அரசு விட்டுவைக்காது என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் முன்ஜாமீன் மனு குறித்து கேள்வி எழுப்பினார். "பொய்யான புகார் என்றால் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஏன் முன்ஜாமீன் பெற வேண்டும்? தைரியமாக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டியதுதானே? கைது செய்யப்படாத நிலையிலேயே முன்ஜாமீன் கோருவது, தவறு செய்ததனால் வந்த பயத்தையே காட்டுகிறது." "திருவண்ணாமலையில் நடைபெற்றது பொதுத் தரிசனம்; மதுரையில் நடைபெற்றது கும்பாபிஷேகம். இரண்டையும் ஒப்பிட்டுப் பேசுவது ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுவதற்குச் சமம். அடிப்படையே தெரியாமல் பேசக் கூடாது" என்றார்.
பதிலடி
உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி
சட்டசபையில் அமைச்சர்கள் யார் என்றே தெரியவில்லை என உதயநிதி ஸ்டாலின் கூறிய விமர்சனத்திற்குப் பதிலளித்த அமைச்சர், "சட்டசபைக் கூட்டத் தொடரை முழுமையாக கவனித்திருந்தால் அமைச்சர்கள் யார் என்பது தெரிந்திருக்கும். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகும் தெரியவில்லை என்றால், அவர் வகுப்பைக் கவனிக்கவில்லை என்றுதான் அர்த்தம்."
"கூட்டம் தொடங்கி ஒரு மணி நேரத்திலேயே சட்டசபையிலிருந்து வெளியேறிவிட்டால், அமைச்சர்களைப் பற்றி எப்படித் தெரியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.
விசாரணை
ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி விசாரணைத் தீவிரம்
ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி விவகாரத்தில் தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், காவல் துறையின் விசாரணையின் அடிப்படையில் வேறு எந்தெந்த இடங்களில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது கண்டறியப்பட்டு மீட்கப்படும் என்றும், இதில் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.