டெங்கு காய்ச்சல் பரவல் - முகக்கவசம் அணிய வலியுறுத்தும் தமிழக அரசு
தமிழ்நாடு மாநிலத்தில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. அதனோடு பருவகாலத்தில் பரவக்கூடிய தொற்றுநோய் பாதிப்பும் அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் வெளியில் செல்லும்பொழுது முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்று பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர், "சளி, காய்ச்சல், இரும்பல், தொண்டைவலி போன்ற உபாதைகளோடு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே 'ப்ளூ' என்னும் வைரஸால் ஏற்படும் 'இன்ப்ளூயன்சா' காய்ச்சலும் அதிகரித்து காணப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தேவையென்றால் தடுப்பூசி போடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் அவர் அந்த சுற்றறிக்கையில், பொதுமக்கள் காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் மக்கள் தாமதிக்காமல் மருத்துவமனைகளை அணுகவேண்டும். மருத்துவர்களும் நோயின் தீவிரத்தினை அறிந்து சிகிச்சையளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தேவையென்றால் தடுப்பூசி போடலாம் என்றும், பாதிப்புடையோர் சில நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்வது நல்லது என்றும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மருத்துவத்துறை பணியாளர்களும், சுகாதாரத்துறை கள பணியாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் 3 அடுக்கு பாதுகாப்பளிக்கும் முகக்கவசங்களை அணியவேண்டும் என்றும் சுகாதாரத்துறை இயக்குனர் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.