சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள்
வெள்ளியங்கிரி மலையானது சிவபெருமானின் ஏழுமலை என்றும், தென் கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள இந்த வெள்ளியங்கிரி மலை மிக அபாயகரமானதாகக் கருதப்பட்டாலும் பக்தர்கள் தொடர்ந்து புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இமயமலையில் இருக்கும் கயிலாய மலைக்கு செல்ல முடியாதவர்கள் இந்த மலைக்கு யாத்திரை சென்றால் கயிலாயமலைக்கு சென்ற பலனை பெறலாம் என சித்தர்கள் கூறியதாக வரலாறு தெரிவிக்கிறது. இந்த கோயிலுக்கு சுமார் 50 கி.மீ.,தூரம் நடைபயணம் கொண்ட புனிதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. மலைமேல் ஏறி சாமிதரிசனம் செய்ய முடியாதவர்கள் மலை அடிவாரத்தில் உள்ள கோயிலிலேயே வழிபட்டுவிட்டு செல்கின்றனர். இந்த சிவபெருமான் சுயம்பு லிங்கமாக தோன்றி காட்சியளிக்கிறார். பெருமாளுக்கு ஏழுமலையாக திருப்பதி கோயில் உள்ளது போல், சிவபெருமானின் ஏழுமலையாக இந்த வெள்ளியங்கிரிமலை திகழ்கிறது.
மகா சிவராத்திரி மற்றும் சித்திரா பவுர்ணமி தினங்களில் களைகட்டும் வெள்ளியங்கிரி
இந்த மலையேறுவது நீண்டதூரம் பயணம் என்பதால் உடல்பலம் கொண்டவர்களால் மட்டுமே இந்த மலையினை ஏற முடியும். இந்த பயணத்தில் முதல் மற்றும் ஏழாவது மலையேற சற்று கடினமாகவே இருக்கும் என கூறப்படுகிறது. இதன்வழியில் பாம்பாட்டி சித்தர் குகை அமைந்துள்ளது. இதனை கடந்துசென்று வெள்ளியங்கிரியில் உள்ள ஏழாவது மலையில் உள்ள பஞ்சபூத லிங்கத்திற்கு பக்தர்கள் தங்கள் கைகளினாலேயே பூஜை செய்து செல்கிறார்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயநோய் உள்ளவர்கள் மற்றும் 40வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த மலையை ஏறுவது உயிருக்கே ஆபத்தாக முடியவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சிறப்புமிக்க இந்த மலைக்கு பக்தர்கள் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் அதிகம் செல்வர். மகா சிவராத்திரி மற்றும் சித்ராபவுர்ணமி பூஜைகள் இங்கு மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.