பெங்களூர் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு
பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு பெங்களூர் மற்றும் கொச்சுவேலி (திருவனந்தபுரம்) இடையே சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வரை பெங்களூர் - கொச்சுவேலி இடையே வாரத்திற்கு மூன்று நாட்கள் சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளன. பெங்களூரில் இருந்து வாரத்தின் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9 மணிக்கு ரயில் கிளம்பி அடுத்த நாள் பிற்பகல் 2.15 மணிக்கு ரயில் கொச்சுவேலியை சென்றடையும். இதேபோல், செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வரை கொச்சுவேலியில் இருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 10 மணிக்கு ரயில் பெங்களூர் சென்றடையும்.
மங்களூர் - கொச்சுவேலி இடையேயான சிறப்பு ரயிலும் நீட்டிப்பு
பெங்களூர் மற்றும் கொச்சுவேலி இடையே இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், பெங்களூரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், மாவெலிக்கரை மற்றும் கொல்லம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொச்சுவேலி மற்றும் மங்களூர் இடையேயான வாராந்திர சிறப்பு ரயிலும் செப்டம்பர் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் கொச்சுவேலியில் இருந்து வாராவாரம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6.40க்கு கிளம்பி அடுத்த நாள் காலை 7 மணிக்கு மங்களூர் சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக மங்களூரில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு கிளம்பி, அடுத்த நாள் காலை 8 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.