தென்னிந்தியாவிலேயே சரஸ்வதிக்கென அமைந்துள்ள தனி கோயிலில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு
கல்வி கடவுளாக வழிபடப்படும் சரஸ்வதி தேவிக்கு திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் ஓர் தனி கோயில் உள்ளது. தென்னிந்தியாவிலேயே சரஸ்வதிக்கென தனியாக அமைக்கப்பெற்றுள்ள ஒரே கோயில் என்றால் அது இது தான். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகள் மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் இங்கு மிக சிறப்பாக பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்து திரளாக வழிபாடு செய்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பாத தரிசன விழா மிக விமர்சையாக நடந்தது.
'வித்யா ஆரம்ப விழா' நாளை(அக்.,24) நடக்கவுள்ளது
இன்றைய தினம் சரஸ்வதியை வழிபட்டால் கல்வி மற்றும் தொழில்களில் மேன்மை பெறலாம் என்று கூறுவார்கள். அதன் காரணமாக தமிழ்நாடு மாநிலம் மட்டுமின்றி வெளிநாடு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள், தொழில் செய்வோர் என பலர் இங்கு வந்து சரஸ்வதி அம்மனை தரிசனம் செய்து சென்றனர். கல்வியில் சிறக்க புத்தகங்கள், பென்சில் பேனாக்கள், சிலேட்டுகள் போன்ற பொருட்களை சரஸ்வதி அருகில் வைத்து மாணவர்கள் வழிபாடு செய்து எடுத்து சென்றனர். மேலும், இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் கல்வியினை ஆரம்பிக்கும் குழந்தைகள் நெல்மணிகளில் 'அ' என்று எழுத வைக்கும் 'வித்யா ஆரம்ப விழா' நாளை(அக்.,24) நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.