சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபதுமனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு இந்த ஆண்டு நவம்பர் 7 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது பின்வருமாறு:- 07/11/2024 சூரசம்ஹாரத்தை முன்னிட்டு 06/11/2024 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் பொது மக்கள் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அன்று திருச்செந்தூருக்கு சென்று தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன்படி வருகின்ற 07/11/2024 சூரசம்ஹாரம் வருவதால் திருச்செந்தூருக்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்பதிவு செய்து பயணிக்கலாம்
இதனடிப்படையில் வருகின்ற 06/11/2024 புதன்கிழமை அன்று சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு. திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கு மற்றும் 07/11/2024 திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு. திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது . மேற்கூறிய இடங்களிருந்து அரசு போக்குவரத்துக் கழகத்தின் வலைதளமான www.tnstc.in மற்றும் அதிகாரப்பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது . இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.