தங்கக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியானது, 2023-24-ம் நிதியாண்டிற்கான முதல் தங்கக் கடன் பத்திர முதலீட்டிற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. தங்கத்தை பயன்பாட்டுக்காக அல்லாமல் முதலீட்டுக்காக வாங்குபவர்களுக்கு 2015-ம் ஆண்டு தங்கக் கடன் பத்திரத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் சார்பில் தங்கக் கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடும். இந்தப் பத்திரங்களை இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும் வாங்கலாம். இந்தக் கடன் பத்திரங்களை வங்கிகளில் பங்குத் தரகர்கள் மூலம் வாங்கிக் கொள்ள முடியும். நடப்பு நிதியாண்டிற்கான முதல் சீரிஸ் தங்கக் கடன் பத்திரமானது தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது சீரிஸானது செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் எனத் தெரிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.
தற்போதைய தங்கக் கடன் பத்திர அறிவிப்பு குறித்த முழுமையான தகவல்கள்:
இன்று (ஜூன் 19) முதல் ஜூன் 23-ம் தேதி வரை இந்த கடன் பத்திரங்களை வாங்க விண்ணப்பிக்கலாம். இந்தக் கடன் பத்திரத்தில் ஒரு கிராமிற்கு ரூ.5,926 விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கடன் பத்திரங்களை வாங்க விரும்பும் யாராக இருந்தாலும், குறைந்தபட்சம் 1 கிராமில் தொடங்கி அதிகபட்சம் 4 கிலோ வரையிலான தங்கத்திற்கான கடன் பத்திரத்தைப் வாங்க முடியும். 8 வருட முதிர்வு காலம் கொண்ட இந்தத் திட்டத்தில் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு வருடத்திற்கு 2.5% வட்டி வழங்கப்படுகிறது. முதிர்வு காலத்திற்கு முன்பாகவே திட்டத்தில் இருந்து வெளியேற விரும்புபவர்கள் முதலீடு செய்து 5 வருடங்கள் முடிந்த பிறகு, வெளியேற முடியும். முதிர்வு காலத்திற்கு முன்பே வெளியேறுபவர்கள் பெறும் வட்டிக்கு வரிப்பிடித்தம் உண்டு.