
முன்பதிவு பெட்டிகளில் சட்டவிரோதமாக பயணிக்கும் பயணிகளை கட்டுப்படுத்த தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் (Reserved Coaches) வடமாநிலப் பயணிகள் அத்துமீறிப் பயணம் செய்வதைக் கட்டுப்படுத்தவும், டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் நிம்மதியாக பயணிக்கவும் தெற்கு ரயில்வே புதிய வழிகாட்டுதல்களையும், அதிரடி நடவடிக்கைகளையும் அறிவித்துள்ளது. சமீபத்தில் திருப்பூரில், முன்பதிவு டிக்கெட் வைத்திருந்த பெண்களுக்கு இடமில்லாத நிலை ஏற்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உத்தரவுகள்
தெற்கு ரயில்வேயின் முக்கிய உத்தரவுகள்
கூட்டத்தை நெறிப்படுத்த முன்பதிவில்லாத பெட்டிகளில் (Unreserved coaches) தடுப்புகளை அமைத்து, பயணிகளை வரிசையில் நெறிப்படுத்தி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்க வேண்டும். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் டிக்கெட் இல்லாத பயணிகள் ஏறுவதைத் தடுக்க, அனைத்து விரைவு ரயில்களிலும் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். வடமாநிலம் மற்றும் தொலைதூரம் செல்லக்கூடிய ரயில்களில், டிக்கெட் பரிசோதகர்கள் தங்கள் பெட்டிகளில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே பயணிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து, அவர்களை அந்தப் பெட்டியிலிருந்து வெளியேற்ற வேண்டும். விதிகளை மீறும் டிக்கெட் பரிசோதகர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே எச்சரித்துள்ளது.