வந்தே பாரத் ரயில்களில் ஸ்லீப்பர் கோச் விரைவில் அறிமுகம்
இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. முதன்முதலாக துவங்கப்பட்ட இந்த ரயிலின் அதிவேகம், குளிர்சாதன வசதி, போன்ற சேவைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனால் நாடு முழுவதும் இந்த ரயில் சேவையினை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ரயிலுக்கான பெட்டிகள் சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள ஐ.சி.எப்.,தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் சேவை தற்போது ரயில்வே துறையில் ஓர் முக்கிய இடத்தினை பிடித்துள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை.
ஒட்டுமொத்த ரயில்வே துறைகளையும் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்ல நிர்ணயம்
இந்நிலையில் ஒட்டுமொத்த ரயில்வே துறைகளையும் வந்தே பாரத் ரயில் சேவைகள் மூலம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல ஓர் இலக்கினை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி தற்போதுவரை மக்களின் பயன்பாட்டில் உள்ள வந்தே பாரத் ரயில்கள் அனைத்திலும் சீட்டர் வசதிகள் மட்டுமே உள்ள நிலையில், இதன் அடுத்தகட்ட வசதிக்கொண்ட 2 ரயில்கள் தற்போது தயாரிக்கப்படுகிறது. இதனிடையே இதுகுறித்து ஐசிஎப் தொழிற்சாலையின் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா, "படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் நடப்பு நிதியாண்டிற்குள் அதாவது, 2024ம் ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் அவர் குறுகிய தூரத்திற்கான வந்தே பாரத் ரயில் பெட்டிகளும் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.