
கர்நாடகா முதல்வராக பதவியேற்கிறார் சித்தராமையா
செய்தி முன்னோட்டம்
கர்நாடகா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து, அதில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியினை பிடித்தது.
எனினும், முதல் அமைச்சர் பதவியினை ஏற்கப்போவது யார்? என்னும் கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது.
முதல்வர் பதவிக்கு டி.கே.சிவகுமாருக்கும், சித்தராமையாவுக்கும் கடும் போட்டி நிலவியது.
இதனையடுத்து ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் காங்கிரஸ் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தினார்.
பின்னர் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோர் மத்தியில் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டார்.
அவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சவார்த்தையின் போதும் சமரசம் ஏற்படவில்லை.
அதனால் மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு இறுதி முடிவினை எடுத்தனர்.
பதவியேற்பு விழா
பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா
பின்னர் காங்கிரஸ் தலைமை சித்தராமையாவை கர்நாடகாவின் முதல்வராகவும், கே.டி.சிவகுமார் அவர்களை துணை முதல்வராகவும் நியமிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது.
இதனை தொடர்ந்து சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோர் ராஜ்பவனுக்கு நேரில் சென்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர் என்று கூறப்படுகிறது.
அதனை ஏற்று ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு கடிதத்தினை வழங்கினார்.
அதன்படி கர்நாடகா முதல்வராக சித்தராமையா பதவியேற்கும் விழா இன்று(மே.,20) பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் மதியம் 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் சித்தராமையாயுடன், துணை முதல்வராக கே.டி.சிவகுமாருக்கும், 20க்கும் மேற்பட்ட அமைச்சர்களுக்கும் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அகில இந்தியளவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.