கிருஷ்ணர் ஜென்மபூமி வழக்கு: மதுராவில் உள்ள மசூதியை ஆய்வு செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒப்புதல்
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயிலுக்கு அருகில் உள்ள ஷாஹி இத்கா மசூதி வளாகத்தை நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் ஆய்வு செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வழக்கறிஞர் கமிஷனர்கள் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவின் முதன்மை ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கமிஷனர் யார் என்பதும், ஆய்வு முறைகள் குறித்தும் வரும் திங்கள்கிழமை முடிவு செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணர் பிறந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக இந்து அமைப்புகள் கூறி, மசூதியில் ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த கோரிக்கை உள்ளூர் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்து தரப்பினரின் குற்றச்சாட்டுகள்
இந்நிலையில், தற்போது அலகாபாத் உயர்நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம்கள் தரப்பு அடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயிலுக்கு அருகில் ஷாஹி இத்கா மசூதி அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான இந்த மசூதி, கத்ரா கேசவ் தேவ் கோவிலை இடித்து கட்டப்பட்டது என்றும், அது முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின்படி இடிக்கப்பட்டது என்றும் இந்து தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், 13.37 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள மசூதியின் முழு உரிமையையும் அவர்கள் கோரியுள்ளனர். அந்த மசூதியில் பொறிக்கப்பட்டிருக்கும் நாகங்கள் மற்றும் தாமரைகள் இந்து புராணங்களில் இருப்பது போல் இருப்பதாகவும் இந்து தரப்பினர் கூறியுள்ளனர்.