அமர்நாத் யாத்திரையில் பூரி, பிரைடு ரைஸ், தோசைக்கு தடை
இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரையின் பொழுது, பூரி, தோசை, வெண்ணெய் போன்ற 40க்கும் மேற்பட்ட உணவு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலிருந்தும், அமர்நாத் யாத்திரையில் கலந்து கொள்வார்கள். இயற்கையாக, பனியால் உருவாகும் அந்த அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க கோடான கோடி மக்கள், இமயமலையில் உள்ள அமர்நாத் நகருக்கு வருவதுண்டு. ஹிந்து மதத்தவர்களின் முக்கிய கோவிலாக கருதப்படும் இந்த அமர்நாத் கோவிலை, ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரியம் நிர்வகித்து வருகிறது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிரைடு ரைஸ், பூரி, பீட்சா, பர்கர், பரோட்டா, தோசை மற்றும் துரித உணவுப் பொருட்கள் என 40 உணவு பொருட்களை யாத்திரையின் போது எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் துவங்கும் யாத்திரை
ஒவ்வொரு ஆண்டும், ஜூலை மாதம் துவங்கும் இந்த யாத்திரையில், 2 மாதங்கள் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த 2023-ஆம் ஆண்டின் யாத்திரை, வரும் ஜூலை 1 அன்று தொடங்கி, ஆகஸ்ட் 31 வரை நடைபெறுகிறது. மொத்தம் 14 கிமீ தூரம் வரை செல்லும் இந்த யாத்திரை பாதையில், மேற்கூறிய பொருட்களுக்கு மட்டுமே தடை. மற்றபடி, தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் சாலட் போன்ற ஆரோக்கியமான பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி உண்டு. அமர்நாத் யாத்திரையில் நீண்ட தூரம் நடக்க வேண்டி இருப்பதால், யாத்திரை தொடங்கும் முன்னர் பக்தர்கள், தினமும் 5 கிமீ நடைப்பயிற்சி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.