₹10, ₹20 நோட்டுகளுக்கு தட்டுப்பாடா? உண்மை நிலவரத்தை விளக்கிய மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், நாடு முழுவதும் சந்தைகளில் 10, 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பணமில்லாப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க இவ்வகை நோட்டுகளை அச்சிடுவதை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) குறைத்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு சுற்றறிக்கை பரவி வருகிறது. இந்த சுற்றறிக்கை முற்றிலும் போலியானது எனப் பத்திரிகைத் தகவல் பணியகத்தின் (PIB) உண்மை சரிபார்ப்புக் குழு திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் பெயரையும் சின்னத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி விஷமிகள் இத்தகைய வதந்திகளைப் பரப்பி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை
வாட்ஸ்அப்பில் உலா வரும் போலி சுற்றறிக்கை
தீபாவளி பண்டிகை கால கொள்முதலுக்காக பொதுமக்கள் ரொக்கப் பணத்தையும், குறிப்பாகச் சில்லறை வர்த்தகத்திற்கு அவசியமான சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளையும் அதிகளவில் நாடி வருகின்றனர்.
இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, அக்டோபர் 27 தேதியிட்ட 'RBI/2026-27/124' என்ற போலி எண்ணுடன் கூடிய சுற்றறிக்கை ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பகிரப்பட்டு வந்தது.
அதில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளைத் துரிதப்படுத்தவும் காகிதப் பணப் புழக்கத்தைக் குறைக்கவும் 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறைக்கப்பட்டு வருவதாகவும், பண்டிகைக் காலச் செலவுகளுக்குப் பொதுமக்கள் யுபிஐ, கார்டுகள் போன்ற டிஜிட்டல் முறைகளுக்கு மாற வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
எச்சரிக்கை
பிஐபி உண்மை சரிபார்ப்பு மற்றும் அதிகாரப்பூர்வ மறுப்பு
ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ சின்னத்துடன் வலம் வரும் ஆவணம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசின் பிஐபி உண்மை சரிபார்ப்புக் குழு (PIB Fact Check), இந்தத் தகவலில் எள் முனையளவும் உண்மையில்லை எனத் தெரிவித்துள்ளது.
சிறிய மதிப்புடைய பணத்தாள்களின் இருப்பு குறித்தோ அல்லது அவற்றின் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தோ ரிசர்வ் வங்கி எவ்வித சுற்றறிக்கையையோ வழிகாட்டுதலையோ வெளியிடவில்லை என்று திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் திட்டமிட்டுப் பரப்பப்படும் இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்பவோ மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி சார்ந்த அதிகாரப்பூர்வ தகவல்களை ரிசர்வ் வங்கியின் வலைத்தளத்தில் மட்டுமே சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், போலிச் செய்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.