சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்
செய்தி முன்னோட்டம்
சென்னை தாம்பரம் அருகேயுள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் இன்று(ஆகஸ்ட்.,1)அதிகாலை வாகனத்தணிக்கையில் போலீசார் உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக ஸ்கோடா கார் ஒன்று வந்துள்ளது.
அதனைத்தடுத்து நிறுத்த போலீசார் முயற்சி செய்ததையடுத்து, நிற்காமல் வேகமாக சென்ற அந்த கார் காவல்துறை வாகனம்மீது மோதி நின்றுள்ளது.
அதில் மொத்தம் 4 பேர் வந்திருந்தநிலையில், 2 ரவுடிகள் மட்டும் ஆயுதங்களுடன் கீழேயிறங்கி போலீசாரை தாக்கத்துவங்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் கையில் வெட்டுப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
அப்போது காரிலிருந்த மற்ற இருவர் தப்பியோடியதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட 2 ரவுடிகளுக்கும் காயம் ஏற்பட்டது.
அவர்களை போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
என்கவுண்டர்
சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் ஓட்டேரி காவல்நிலையத்தின் பதிவேடு குற்றவாளிகள்
ஆனால் அவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இவர்கள் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த ரவுடிகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சோட்டா வினோத்,ரமேஷ் என்றும், இவர்கள் ஓட்டேரி காவல்நிலையத்தின் பதிவேடுக்குற்றவாளிகள் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் வினோத் மீது 15 கொலைமுயற்சி வழக்குகள், 10 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவாகியுள்ளது.
அதேபோல் ரமேஷ் மீது 7 கொலைமுயற்சி வழக்கு, 5 கொலைவழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் பதிவாகியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த ஆய்வாளர் சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
போலீசார் தங்கள் உயிரினை தற்காத்துக்கொள்ளவே இந்த துப்பாக்கிச்சூட்டினை நடத்தியதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.