Page Loader
சரத் ​​பவாரின் ராஜினாமா நிராகரிப்பட்டது: தொண்டர்கள் கொண்டாட்டம் 
தேசியவாத காங்கிரஸ் கட்சி 1999இல் சரத் பவாரால் நிறுவப்பட்டது.

சரத் ​​பவாரின் ராஜினாமா நிராகரிப்பட்டது: தொண்டர்கள் கொண்டாட்டம் 

எழுதியவர் Sindhuja SM
May 05, 2023
02:49 pm

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP) தலைவர் பதவியில் இருந்து தான் விலக போவதாக சரத் பவார் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். அந்த ராஜினாமா இன்று(மே 5) ஒரு மனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்று மும்பையில் நடந்த கட்சி கூட்டத்தில் இது குறித்து விவாதித்த உயர்மட்ட தலைவர்கள், அவரது ராஜினாமாவை நிராகரித்துள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி 1999இல் சரத் பவாரால் நிறுவப்பட்டது. தற்போது 82 வயதை எட்டியுள்ள சரத் பவார் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக போவதாக இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தார். அவரது ராஜினாமாவை நிராகரித்த கட்சியின் மூத்த தலைவர்கள், அவரே கட்சியின் தலைவராக தொடர்வார் என்று அறிவித்துள்ளனர்.

DETAILS

மூத்த NCP தலைவர் பிரபுல் படேல் தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது 

இன்று நடந்த கட்சி கூட்டத்தில் சரத் ​​பவாரின் மகள் சுப்ரியா சுலே மற்றும் மருமகன் அஜித் பவார் ஆகியோரும் கலந்து கொண்டனர். மூத்த NCP தலைவர் பிரபுல் படேல் தலைமையில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், அடுத்த தலைவராக யார் பொறுப்பேற்பார் என்பது தீர்மானிக்கப்படவில்லை. "இன்றைய கூட்டத்தில், ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சரத் பவாரே கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. தலைவர் பதவியில் இருந்து விலகும் அவரது முடிவுக்கு அனைவரும் ஒருமனதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்சித் தலைவராக சரத் பவார் நீடிக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் தலைவராக நீடிக்க வேண்டும்." என்று பிரபுல் படேல் கூறியுள்ளார்.