இன்று இரவு கரையை கடக்க இருக்கும் ரெமல் புயல்: கொல்கத்தாவில் விமான சேவைகள் இடை நிறுத்தம்
வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்று ரெமல் புயலாக மாறி, இன்று நள்ளிரவு மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரைக்கு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. ரெமல் என்றால் அரபு மொழியில் மணல் என்று அர்த்தமாகும். இந்த பருவத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் முதல் பருவமழைக்கு முந்தைய சூறாவளி இதுவாகும். வட இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் புயல்களுக்கு பிராந்தியங்கள் பெயரிடும் முறையைப் பின்பற்றி, ஓமன் இந்த பெயரை வழங்கியுள்ளது. மே 26 மற்றும் 27ஆம் தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
ரெமல் புயல் ஒரு மணி நேரத்திற்கு ஆறு கிமீ வேகத்தில் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்தது. . ரெமல் புயல் இன்று நள்ளிரவு மேற்கு வங்கம் மற்றும் அதை ஒட்டிய வங்காளதேச கடற்கரையை சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, கொல்கத்தா, ஹவுரா, நாடியா மற்றும் புர்பா மேதினிபூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகள் இன்று நண்பகல் முதல் 21 மணி நேரத்திற்கு விமான நடவடிக்கைகளை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.