மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் ரெமல் புயல்: இன்றைய வானிலை நிலவரங்கள்
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இந்த புயல் நாளை(மே 26) அதிகாலை வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையில் கரையைக் கடக்கும் என்றும், இதனால் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரெமல் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து பின்னர் கிழக்கு நோக்கி நகர்ந்து, இன்று காலை கிழக்கு-மத்திய வங்கக் கடலில் கடுமையான சூறாவளி புயலாக மாறியது. இது மேலும் தீவிரமடைந்து வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தின் கடற்கரையை நோக்கி செல்லும் என்றும், இன்று இரவுக்குள் சாகர் தீவு (இந்தியா) மற்றும் கெபுபாரா(வங்காளதேசம்) இடையே இது கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
135 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு
கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் என்றும், அது இடையிடையே மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும் IMD கணித்துள்ளது. மே 26-27 இல், மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்யக்கூடும், மேலும் மே 27-28இல் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் மிக அதிக மழை பெய்யக்கூடும். 1.5 மீட்டர் வரை இந்த புயல் எழுச்சி அடையும் என்றும், இது கரையை கடக்கும் போது மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷின் கரையோரப் பகுதிகளின் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.