வட இந்தியாவில் கடும் மழை: டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு
வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது. நேற்று வட இந்தியாவில் நிலவிய மேற்கத்திய இடையூறு காரணமாக, டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், டெல்லியின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றும் கனமழை பெய்து வருகிறது.
கேரளா மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது
டெல்லியில் 58 வயது பெண் ஒருவர் தனது அடுக்குமாடி குடியிருப்பின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் அமர்நாத் யாத்திரை இன்று மூன்றாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் நேற்று சாலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் சுமார் 3,000 வாகனங்கள் அந்த பகுதியில் சிக்கித் தவிக்கின்றன. தென் இந்தியாவில், கேரளா மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு IMD "மஞ்சள்" எச்சரிக்கை விடுத்துள்ளது.